×

மஞ்சள் வாரியத்துக்கு மாநிலங்களில் மண்டல அலுவலகம் அமைக்க கோரிக்கை

ஈரோடு, டிச. 23: மஞ்சள் வாரியத்துக்காக அந்தந்த மாநிலங்களில் மண்டல அலுவலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.சத்தியமூர்த்தி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய விளை பொருள்களில் மஞ்சளும் ஒன்று. தமிழக அளவில் மஞ்சள் ஏலம் மற்றும் விற்பனையில் ஈரோடு மாவட்ட மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இது நாட்டின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 30 சதவீதம் ஆகும். மாவட்டத்தில், ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபி கூட்டுறவுச் சங்கம் என 4 இடங்களில் தினந்தோறும் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

நறுமணப் பொருள்கள் வாரியத்தின் கீழ் பட்டியலில் வரும் மஞ்சளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சமீபத்தில் ஒன்றிய அரசு மஞ்சளுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான தலைமை அலுவலகத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக இல்லாமல், தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழ்நாடு மட்டுமின்றி மஞ்சள் உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகாவும் உள்ளன. எனவே, அந்தந்த மாநிலங்களிலும் மஞ்சள் வாரியத்துக்கான மண்டல அலுவலகங்களை அமைக்க வேண்டும். அப்போது தான் மஞ்சள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பணிகள் மேம்படுத்தமுடியும். இதன் மூலமாக மஞ்சளுக்கான விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மஞ்சள் வாரியத்துக்கு மாநிலங்களில் மண்டல அலுவலகம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : yellow board ,Erode ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது